Saturday, October 2, 2010

அ...ஆ...(அபிவிருத்தியும் ஆவுரஞ்சிக்கல்லும்)
இந்த அறிவுறுத்தல் பலகை இருப்பது வேறு எங்குமல்ல.அடியேன் பொறியியலாளராகப் பணிபுரியும் யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் நெல்லியடிச்சந்தி அருகாமையில் தான்.அதுவும் வீதி அகலமாக்கும் எங்களுக்கு எதிராகத்தான். சரியாக ஒருமுறை வாசித்துப் பாருங்களேன்.

இரண்டு வருடங்களுக்கு குறையாத ஐந்து வருடங்களுக்கு மேற்படாததுமான சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் ரூபா 50000ற்கு குறையாததும் ரூபா 2500000ற்கு மேற்படாததும் தண்டப்பணம் அல்லது பிணை வழங்க முடியாத இரண்டு குற்றங்களும் விதிக்கப்படக்கூடிய கடும் குற்றங்களாகும்என்று கடைசியில் விபரித்திருப்பது வயிற்றில் புளியைக்கரைக்கிறது. யாழ்ப்பாணத்தில் றோட்டுப் போடுகிறேன். அதுவும் ஒன்பது மீட்டர் அகலத்தில் (Highway in Jaffna) என்று பெருமையடித்த நானும் இன்று முழி பிதுங்கி நிற்கிறேன்.மனக்கண்ணில் சிவாஜி பட ஆரம்பக் காட்சி போல என்னைக் கைவிலங்கிட்டு இழுத்துப்போவதும் பின்னர் படங்களில் வருவதுபோல மணியடித்தால் சோறு போடுவதும் அதற்காக கியூவில் நிற்பதும் கண்ணில் விரிகிறது.(அப்பப்பா….என்ன பயங்கரம்!)

இந்த அறிவுறுத்தலுக்குரிய காரணம் வீதி அபிவிருத்தியின் போது வீதியின் இருபுறமும் இருந்த, புதர் மண்டிக் கவனிப்பாரின்றிக் கிடந்த பழைய கோவில் கேணியும் கூரையில்லா மடமும் தான். எங்களுக்கு ரோட்டுத்தான் வேண்டும் என்று இடிக்க கோவில் நிர்வாகமும் அயலவர்களும் சம்மதித்தபோது வந்தது சோதனை தொல்லியல் திணைக்களம் வடிவில்!

வேண்டாம் தொல்லை ! யாழ்ப்பணத்திற்கு ரோட்டுப் போடப்போய் கடைசியில் சிறைவாசம் வேண்டாம் என ஆவரங்கால் officeல் தீர்மானித்து குறிப்பிட்ட இட்த்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் வேலையைத் தொடங்கினோம். .(எதிர்காலத்தில் இந்த இட்த்தில் வீதி விபத்துக்கள் ஏற்படலாம் என்பது முக்கியமான பிரச்சனை)


அபிவிருத்தியின்றி இருந்த யாழ்ப்பாணத்திற்கு எது தேவை புதிய வீதியா அல்லது தொல்பொருளா என்பது விவாதத்திற்குரிய விடயம்.உண்மையிலேயே தொல்பொருள் முக்கியமெனின் அவை சரியாகப் பராமரிக்கப் படல் வேண்டும்.கவனிப்பாரின்றி அழிந்து போகும் ஒன்று அபிவிருத்திக்கு தடையாக இருத்தல் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது என் போன்ற பொறியியலாளரின் வாதம்தொல்பொருலாளரைப் பொறுத்தவரை உண்மையான வரலாற்றுப் பெறுமதி தெரியாமல் அழிக்கப்பட இருந்த ஒன்று தடுக்கப்பட்டது.இது விடயத்தில் தொல்பொருலாளர் ஒருவர் வரலாற்று எச்சங்கள் அழிக்கப்படுவதாக வேதனைப்பட்ட போது என்னால் பதில் கூற முடியவில்லை. வீதி அபிவிருத்தி செய்கிறேன் என இறுமாந்து இருந்த என்னை அவரது வேதனை சிறிது யோசிக்க வைத்தது.

தவிர பலகாலங்களாக அபிவிருத்தியின்றி இருந்த வட,கிழக்கு மாகாணங்களில் புனர்நிர்மாணப்பணிகளின் போது இவ்வாறானவை இடம்பெறுவது தவிர்க்க முடியாதது. இருப்பினும் எமது முன்னோரின் கலாச்சார விழுமியங்கள் பல பெறுமதி தெரியாமல் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது யோசிக்கப்பட வேண்டிய ஒரு விடயம். என்னைப் பொறுத்தவரை அபிவிருத்தி என்பது கட்டாயம் மேற்கொள்ளப் படவேண்டிய ஒன்று(அல்லாவிடில் மனிதன் காட்டுவாசியாகவே இருந்த்திருப்பான்).ஆனால் கலாச்சார எச்சங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை என்னால் மறுக்க முடியவில்லை.

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயல்பு தான் என்றாலும் எங்கள் கலாச்சார எச்சங்கள் படிப்படியாக அழிக்கப்படுவது தமிழனின் விருந்தோம்பலையும் கலாச்சாரத்தையும் எங்கள் எதிர்காலத்திற்கு மறக்கடிக்கப் படக்கூடிய சாத்தியம் உள்ளது.இக்கட்டுரையின் நோக்கம் இவ்வாறான எமது பிரதேசத்தில் பெறுமதி தெரியாமல் அழிந்து கொண்டிருக்கும் எஞ்சியுள்ள சில கலாச்சார எச்சங்களைப் பற்றிச் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வது.

எமது முன்னோரின் விருந்தோம்பலைப் பறை சாற்றும் கலாச்சார விழுமியங்களின் எச்சங்களாக இருக்கும் சிலவற்றைப் பற்றி ஒரு சுருக்கமான கண்ணோட்டம்.

சுமைதாங்கிஆள் அளவு உயரம் கொண்ட இது பெருஞ்சுமையோடு வரும் வழிப்போக்கர்கள் தங்கள் சுமையை வேறு உதவி தேவையின்றி இறக்கி வைக்கவும் களைப்பாறிய பின்னர் தூக்கவும் ஏற்றவாறு வடிவமைக்கப் பட்டிருக்கும்.ஆவுரஞ்சிக் கல்

பசுக்களைத் தெய்வமாக மதிக்கும் இந்துக்கள் பசுக்களும் மற்ற வாயில்லா ஜீவன்களும் தண்ணீர் அருந்த ஏற்பாடு செய்தது மட்டுமன்றி அவை நீர் அருந்திய பின்னர் உடலைத் தேய்த்துக் கொள்ள (வேறு எப்படித்தான் அவை சொறிந்து கொள்வது…………………? J) ஏற்பாடு செய்தது தான் ஆவுரஞ்சிக்கல்.
சங்கடம் படலை

வெகு தூரம் நடந்து களைத்துப் போனவர்கள் தண்ணீர் அருந்தி சிறிது நேரம் இளைப்பாறி தேவையெனில் சிறு தூக்கமும் போட்டு(குட்டி rest house என்று சொல்லலாம்) தமது சங்கடங்களைத் தீர்த்துச் செல்வர். காலப்போக்கில் சங்கடம் படலை வீட்டுச்சொந்தக்காரருக்கு சங்கடம் தரும் படலையாக தோன்றவே சிறிது சிறிதாய் அழிந்து போயின.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. எனது சிறுவயதில் பாவனையில் இருந்த சில பொருட்கள் இப்போது பாவனையில் இல்லை(உதாரணம். மூக்குப்பேணி,தூக்குச்சட்டி,திரிகை) இவைகள் எல்லாம் அக்காலத்தில் உபயோகமாய் இருந்த போதும் தற்போது தொழினுட்ப வளர்ச்சி காரணமாக உபயோகமற்றுப் போய்க்கொண்டிருக்கிறன.இப்போது உபயோகிக்கப்படும் அப்பா படுக்கும் சாய்மனை நாற்காலி (நான் வைத்த பெயர்சோம்பேறிக்கதிரைJ ) போன்றவை எதிர்காலத்தில் வழக்கிழந்து போகக்கூடும். இவைகள் தேவையில்லை என ஒரு சாராரும் இல்லை இவை எங்கள் கலாச்சார எச்சங்கள் என மறுசாராரும் வாதாடுகையில் (தீர்ப்புக்கூற நடுவ்ர் லியோனியை அழைக்காமல்………….! J ) உங்களுக்கு தேவை அபிவிருத்தியா அல்லது ஆவுரஞ்சிக்கல்லா எனத் தீர்மானிக்கும் முடிவை வாசகர்களாகிய உங்கள் கையில் ஒப்படைத்துக் கட்டுரையை முடிக்கிறேன்..

5 comments:

 1. Very interesting article.very good

  ReplyDelete
 2. சிந்திக்கத் தூண்டும் சிறந்த பதிவு அருமை நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் . வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

  ReplyDelete
 4. உங்கள் தூண்டுதலுக்கு நன்றி..... நண்பரே..

  ReplyDelete