Sunday, September 23, 2012

என்று தணியும்....?




காதுகளைச் செவிடாக்கும் வெடிச்சத்தத்தின் மத்தியில்
இரைக்காக வானத்தில் வட்டமிடும் பிணந்தின்னிக்கழுகு
பொம்மர் சுப்பர் சொனிக் கிபிர் ஓசை அடங்கினாலும்
ஆர்ப்பரிக்கும் மன ஓசை இன்னும் அடங்குதில்லையே!!!

Tuesday, November 9, 2010

மறதி என்பது வரமா?


அறியாவயதில் அளவின்றி
அடம்பிடித்து
அப்பாவிடம் அடி வாங்கி
அழுதழுது தேம்பிய நாட்களில்
மறதி ஒரு வரம் தான்!!!

பாடசாலை நாட்களில்
நண்பனுடன் முரண்பட்டு
பல நாட்களின் பின் மீண்டும்
பழகும் போதும்
மறதி ஒரு வரம் தான்!!!

காதலைச் சொல்லப் போய்
காதலியிடம் செருப்படி வாங்கி
கவிழ்ந்திருந்து அழுத நாட்களில்
மறதி ஒரு வரம் தான்!!!

துஸ்யந்தன் சகுந்தலையை
மறந்திருக்காவிடின்
நமக்கு ஏது சாகுந்தலம்?
மறதி ஒரு வரம் தான்!!!

மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல்
சில நிகழ்வுகள்!!

புரியாத பிரியம்
பிரியும் போது தான்
புரியும்!!!
ஏதோ புரிகிறது!!!

காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன எல்லை
யார் சொன்னது???
காற்றுக்கும் வேலியுண்டு
பலமான முள் வேலி!!!

 நாமெல்லாம் அதில்
சிக்கிக்கொண்ட சருகுகளாய்!!!

Saturday, November 6, 2010

நிலாக்காலமும் தீபாவளித்திருநாளும்



என்னைப்
பொ றுத்த வரை நீண்ட காலமாக இதுவும் ஒரு கனாக்காலம் தான். “ நிலாக் காய்கிறது நிதம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையேஇந்திரா திரைப்படத்தில் எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட வரிகள். பாடலின் இசை மட்டுமல்ல பாடலின் வரிகளும் ஹரிணியின் சிறுபிள்ளைத்தனமான இனிமையான குரலும் அந்தப் பாடலை உன்னத நிலைக்கு உயர்த்தி இருந்தன. அந்தப் பாடலில் வருவது போல் எனக்கும் சிறு வயதில் இருந்து பூரணை நிலாக்காலத்தில் வேறு எந்த சிந்தனைகளும் இன்றி நிலவை ரசிக்கும் ஆசை இருந்தது. ஆனால் சிறு வயதில் இருந்தே அந்த ஆசை பெரும்பாலும் நிறைவேறாத ஆசையாகவே இருந்து வந்தது

காரணம் எங்களது யாழ்ப்பாண கல்விக்கலாசாரம் தான். என்னைப் பொறுத்த வரை மாலை 6 மணிக்கு பக்கத்து சேச்சில் மணியடித்ததும் நானும் தம்பியும் கை கால் கழுவி கும்பிட்டு முடித்து மேசையில் படிக்க ரெடியாக வேண்டும். இது எனது தந்தையாரின் கண்டிப்பான கட்டளை. நாங்கள் கிரிக்கட் விளையாடி முடித்து வரும்போது பெரும்பாலும் 6 மணி தாண்டும். தந்தையாரும் கையில் ஒரு தடியை எடுத்தவாறு கெதியாக ரெடியாகுமாறு எங்களை விரட்டுவதும் அக்கம் பக்கமெல்லாம் பிரசித்தம்


இதே சமயத்தில் வேடிக்கையான ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். நாம் இருவரும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த நேரம் ஒரு சமயம் லீவில் வீடு வந்த போது பார்த்த காட்சி எனக்கு சிரிப்பை வரவழைத்தது. ஊரவரை வெருட்டும் எங்கள் நாய் பிளாக்கி ஓடிக் கொண்டிருக்க எனது தந்தையார்கெதியாய் கட்டுக்கு போ:” என்றவாறு துரத்திக் கொண்டிருந்தார். காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை. ஒருசமயம் அந்த நாயின் இடத்தில் எனது சிறு பருவ உருவத்தைக் கற்பனை பண்ணிப் பாருங்களேன் J . அடங்காமல் ஊரவரை துரத்தும் எங்கள் நாயும் அப்பாவின் குரலுக்கு மட்டும் அடங்கும்.உண்மையில் எனது தந்தையாரின் அணுகுமுறை ஒரு புரியாத புதிர் தான்.தடியை எடுத்தாலும் அடிப்பது குறைவு(எனக்கும் சரி!நாய்க்கும் சரி). நிலாக்கால ஆசை மட்டுமல்ல பல சிறு வயது ஆசைகளுக்கும் தடை போட்டாலும் எனதும் தம்பியினதும் இன்றைய நிலைக்கு அவை தான் காரணம் என்பதை நினைவு கூர வேண்டும்.



என்னைப்
பொறுத்த வரை எனது சிறு வயது நிலாக்காலத்து ஆசையை கூட்டுவது போல் எனது உறவினர் ஒருவர் தனது குடும்பத்துடன் வீட்டு முற்றத்தில் நிலாக்கால இரவை கதைகள் கூறி ரசிப்பது வழக்கம்(அதுவும் எனது தந்தையார் தடியுடன் என்னை விரட்டும் வேளையில் தான்). அங்கேயும் என்னையொத்த வயதில் இரு சிறுவர் நிலாக்காலத்தை ரசிப்பதை பார்த்துகொடுத்து வைத்தவர்கள்என நினைப்பதுண்டு. ஆனாலும் பெரிய ஒன்றை அடைய வேண்டுமாயின் அற்பமான பலவற்றை தியாகம் செய்ய வேண்டும் என்ற எனது தந்தையாரின் கொள்கையை மறுக்க முடியாதிருந்தது.ஒருவேளை அடம் பிடித்திருந்தாலும் தந்தையாரின் கம்பு என்னைப் பதம் பார்த்திருக்கும். காலம் வளர எனது நிலாக்கால ஆசையும் வளர்ந்தது.

காலம் உருண்டோடியது. 1995.யாழ்ப்பாணத்து மக்களின் தலைவிதியைப் புரட்டிப் போட்ட காலம். நாம் எல்லோரும் யாழ்ப்பாணத்தை விட்டு ஏதிலிகளாக கையில் அகப்பட்டவற்றை மட்டும் எடுத்த வாறு இடம் பெயர்ந்தோம். கோண்டாவில்,யாழ்ப்பாணம்,கொடிகாமம் என இடப்பெயர்வு தொடர்ந்தது. கொடிகாமத்தில் இருந்தும் இடம்பெயர நேர்ந்தது. செல் சத்தங்களுக்கும் துப்பாக்கி வேட்டுக்களுக்கும் இடையே எங்கே செல்வது எனத்தெரியாமல் மட்டுவிலில் ஒரு கோயிலின் வெளிப்புறத்தில் தங்கினோம். எங்கே செல்வது வன்னிக்கா அல்லது இப்படியே தொடர்ந்து இடம் பெயர்ந்த வாறு இருப்பதா எனத் தெரியாமல் பெரியவர்கள் விவாதித்தவாறு இருக்க எனக்கு நித்திரையும் வரவில்லை. வானத்தைப் பார்த்தால் பூரணை நிலவு மேகங்களை விலக்கிய வாறு பிரகாசித்துக் கொண்டிருந்தது

.

ஒருவாறு எனது நிலாக்கால ஆசை வேட்டுச்சத்தங்களுக்கு மத்தியில் நிறைவேறியது.

ஆனால் அதற்குப் பிறகு பல நிலாக்காலங்கள் வந்தாலும் எனக்கென்னவோ முன்பு போல் அந்தப் பாடலில் வருவது போல் ரசிக்க முடியவில்லை. பல்கலைக் கழக வாழ்க்கையில் பரீட்சை நேரம், இரவு படித்து விட்டு ரூமுக்கு திரும்பும்போது நிலாக்காலத்தை ஓரளவு ரசித்திருக்கின்றேன்.!



ஒளியைக் கொண்டாடுவதாய் சொல்லப்படும் தீபாவளி தினத்தை பட்டாசுகளின் சத்தத்தின் மத்தியில் அமாவாசையில் கொண்டாடும்வேளையில்(ஏன் பூரணையில் கொண்டாடவில்லை என்பது கேள்விக்குரிய விடயம்). எனது நிலாக்கால நினைவைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது நிலாக்கால ஆசை வேட்டுச் சத்தங்களுக்கு மத்தியில் நிறைவேறியது கடவுளுக்கே பிடிக்கவில்லையோ என்னவோ! (கடவுள் ஒருவேளை மீண்டும் வெடி(பட்டாசு)களின் மத்தியில் எனக்கு ஒரு நிலாக்காலத்தை தர விரும்பாமல் இருந்திருக்கலாம் !!!)