Thursday, September 23, 2010

கண்மூடிப்பழக்கங்கள் மண் மூடிப் போகாதா?
முன்னோரின் மூடப்பழக்கங்களை காரணம் தெரியாமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றுபவர்கள் நம்மிடையே அதிகம் பேர் இன்னமும் இருக்கிறார்கள்.பூனை குறுக்கே போனால் சகுனம் பார்ப்பவர்களும் பல்லி சொல் கேட்டு நடுங்குபவர்களும் நாள் சரியில்லை என்று வேலையைத் தள்ளிப் போடுபவர்களும் நம்மிடையே அதிகம்.இவை கிராமங்களில் அதிகம் என்றாலும் நகரத்திலும் பரவலாகப் பின்பற்றப் படுகின்றது.

ஒரு குட்டிக்கதை
முன்பு குருகுலம் இருந்த காலத்தில் ஒரு குரு சீடர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது குருவின் வளர்ப்புப் பூனை அவரை பாடம் நடத்த விடாமல் தொந்தரவு படுத்திக் கொண்டிருந்தது.குரு வேறு வழியின்றி சீடரிடம் சொல்லி ஒரு கயிறால் அந்தப்பூனையை ஒரு கம்பத்தில் கட்டிவிட்டு பாடத்தைத் தொடங்குவார். இது தினமும் நடந்தது. சில காலம் செல்ல குருவும் இறந்துவிட குருவின் தலைமைச்சீடன் குருவானான். பிறகும் இந்த வழக்கம் தொடர்ந்தது. ஒரு நாள் அந்தப் பூனையும் இறந்து விட்டது. குருவை மிகச்சரியாகப் பின்பற்றும் அந்தத்தலைமைச்சீடனின் உத்தரவுப்படி மற்ற சீடர்கள் எங்கிருந்தோ ஒரு பூனையைத் தேடிக் கொண்டுவந்து கம்பத்தில் கட்டியபிறகு, புதியகுருவும் தனது குருவைப் பின்பற்றிய திருப்தியுடன் பாடத்தைத் தொடங்கினான்.

முந்தையோரின் பழக்கவழக்கங்களை காரணம் தெரியாமல் அப்படியே பின்பற்றுவது எவ்வளவு முட்டாள்தனமானதென்பதற்கு இந்தக்கதையே போதும்.. சிலசமயம் காரணம் கேட்டாலும் “அது அப்படித்தான் …இது எல்லாம் பெரியவர்கள் காரணங்களுடன் தான் வைத்துள்ளார்கள் உங்களுக்கு விளங்காது! ” என்று பதில் வரும்.இவ்வாறு கதைப்பவர்கள் பெரியவர்களாய் இருப்பதால் மறுத்துப்பேசவும் முடியாமல் மெல்லிய நக்கல் சிரிப்புடன் அவ்விடத்தை விட்டு அகலுவது எனது வழக்கம். படிக்காதவர்கள் இவ்வாறு கூறினால் பரவாயில்லை. நன்கு படித்து பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களும் இவ்வாறு பதில் தருவது தான் வேதனைக்குரிய விடயம்.இவ்வாறு இருப்பவர்கள் தாங்கள் மட்டுமல்ல தங்கள் பிள்ளைகளையும் இவ்வாறு நம்ப வேண்டும் என எதிர்பார்ப்பது தான் கொடுமை.

அதற்காக இவையெல்லாமே பிழை என்று சொல்ல வரவில்லை. ’வீட்டினுள் நகம் வெட்டாதே தரித்திரம் வரும்’எனப் பாட்டி சொல்வதை சுத்தத்தை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.எமது முன்னோர் வெருட்டி வெருட்டியே எல்லாவற்றையும் சொல்லியிருப்பதால் “தரித்திரம் வரும்” என்பதையும் மன்னிப்போம்.”இரவு நேரம் வீடுகூட்டினால் வெளியே தள்ளக்கூடாது செல்வம் போய்விடும்” என்பதை அக்காலத்தில் குப்பிவிளக்கில் கூட்டும்போது சிறிய நகை அல்லது பெறுமதியான ஏதாவது தவறிவிடக்கூடும்” என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இப்போது மின்சாரவெளிச்சத்தில் இதைப் பின் பற்றுவதை என்ன சொல்ல? ”விளக்கு வைத்தாப்பிறகு காசு கொடுக்கக் கூடாது.செல்வம் போய் விடும்” என்பது இரவு நெரத்தில் வீடு வரும் யாரோ ஒரு கடன் காரனோ அல்லது கடன் கொடுப்பவனோ சாக்கு சொல்லிவிட்டு தப்புவதற்காக இருக்கலாம்.


இன்னும் சில படு முட்டாள்தனமானவை. எங்கள் வீட்டுநாய் அஜீரணக்கோளாறால் அவதிப்பட்ட போது ஒருவர் சொன்னார் விளக்குமாற்றில் சாப்பாடு வைக்குமாறு ..இது என்ன வைத்தியம் என எனக்குப் புரியவில்லை.உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்களேன்….!
எனக்கு ஒருமுறை கட்கட்டி வந்தபோது பலர் சொன்ன வைத்தியம் இது.”பூனையின் வாலால்கண்ணைத் தடவினால் குணமாகிவிடும்” என்பது. பூனையின் மயிர் எவ்வளவு கெடுதல் என்பது பிரசித்தம், அப்படியிருந்தும் எப்படி அதைச் சிபார்சு செய்தார்கள் என்பது புரியாத புதிர்.(இதற்காக ஒரு பூனையைத்தேடிப் பிடித்து அதன் வாலால் கண்ணைத் தடவும்போது வெருண்ட பூனை கண்ணை பிராண்டினால் என்னாகும்?.....அதோ கதி தான்…)

“நாய்வாலை நிமிர்த்த முடியாது” என்பது பிரசித்தம். இருந்தும் எனது சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு அறிவுஜீவியின் கருத்துப்படி “நாய்வால் வளைந்து சுருண்டு முதுகைத்தொட்டால் குடும்பத்திற்கு கேடு”. அதைக்கேட்ட எங்கள் வீட்டுக்காரரும் உடனேயே செல்லநாயின் வாலை வெட்டி விட்டார்கள்.பாடசாலையால் வந்து பார்த்தால் பரிதாபமாக அறுந்த வாலுடன் படுத்துக்கிடந்தது ஜிம்மி. பிறகு என்னிடம் கிழி வாங்கிய பின் அந்த அறிவுஜீவி எங்கள் வீட்டுப்பக்கமே வருவதில்லை

இவை மட்டுமல்ல. இன்னும் கூறிக்கொண்டே போகலாம்.உங்கள் வீட்டிலும் தாத்தா, பாட்டி இருப்பின் நீங்களும் என்னைப் போல் அனுபவப்பட்டிருப்பீர்கள்.என்னைப் பொறுத்தவரை ஜோதிடம் என்பதே நம்பகத்தன்மை குறைந்தது.பெரிய பில்டப் கொடுத்து வந்தவரிடமே கொஞ்சம் கொஞ்சமாய் விடயம் கேட்டு இறுதியில் அவருக்கே அதை அவர் மனம் கோணாமல் நன்றாகச் சொல்லி அனுப்பும் சாத்திரிமாரை நான் நேரில் கண்டுள்ளேன். சின்ன வயதில் சாப்பாடு ஊட்டுவதற்காக பேய்க்கதை சொல்லி சொல்லியே தமிழர்களில் பலர் வளர்ந்த பின்னும் கூட இரவில் தனியாக நடமாட தயங்குவதுண்டு. இவை காலப்போக்கில் மாறும் என்றாலும் இதன் தாக்கம் எங்கள் அடுத்த தலைமுறையினருக்கும் இருக்கும்.

உண்மையிலேயே இவற்றுக்கு காரணம் உண்டெனில் சப்பைக்கட்டு கட்டாமல் உண்மையான காரணங்களை கூறி வளர்த்தீர்களென்றால் உங்கள் பிள்ளையும் உண்மையான அறிவுடன் வளரும்.(பூனையைக் கட்டிவைத்து விட்டு பாடம் நடத்தும்படி இராது…. )